9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அரசின் வழிமுறைகள் என்னென்ன..?

Filed under: தமிழகம் |

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொற்றுநோயிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க கிட்டத்தட்ட 9 மாதங்கள் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் பகுதிகளில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. பல மாநில அரசுகள் 2021 ஜனவரியில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருந்தாலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன,

அந்த வகையில் தமிழகத்தில் 10,12ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஒரு சதவிகிதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத்துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி பயன்பாட்டுக்கு வைத்திருக்கப்பட வேண்டும்.
  • பள்ளிகளின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது செயல்படும் இடங்களில் கிருமி நாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
  • முதல் கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்.
  • பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குவர அனுமதிக்கப்படுவர்.
  • பெற்றோரின் சம்மத்துடன் வீட்டில் இருந்து படித்து வரும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.
  • ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும்.
  • சமூக இடைவெளியை பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடம் அளிக்கலாம்.
  • இதுபோன்ற நிலையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கப்படலாம்.
  • அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.
  • இணையதள வழி- தொலைத்தூர கற்றல் முறை தொடரும்.
  • மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கலாம்.
  • தனியார் பள்ளி நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.
  • அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
  • அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும்.
  • உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது.
  • நுழைவாயில் மற்றும் பள்ளிக்குள் வரிசையில் நிற்கும் போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
  • இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
  • நீச்சல் குளங்களை மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது.
  • நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படாது.
  • வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம்.
  • வருவதற்கும், செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
  • வரிசையில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம், கட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும்.
  • வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஆசிரியர் அறைகள், அலுவலக பகுதிகள் மற்றும் பிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்வு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.