இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னணி இயக்குனரான ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி, உள்ளிட்டோர் நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்பட சாதனையை முறியடித்து வசூலில் சாதனையை படைத்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுதும் இப்படம் ரூ.1,235 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில், “ஆர்.ஆர்.ஆர்” படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இவ்விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டனர். “ஆர்.ஆர்.ஆர்.” படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று கேள்வி எழுப்பினர். இப்படத்தின் 2ம் பாகத்திற்கு திட்டமிட்டுள்ளதாக இப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கும் திட்டமிருக்கிறது. இதிலும், ராம்சரண் மற்றும் என்.டி.ஆர் இருவரும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாகவுள்ளதால், பிரபல ஹாலிவுட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ராஜமௌலி அல்லது அவரது மேற்பார்வையில் இப்படம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.