சென்னையில் உள்ள அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பலருக்கு 6 ஆயிரம் ரூபாய் சென்று சேரவில்லை என சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் தங்களது உடைமைகளை இழந்தனர். இதையடுத்து வெள்ள நிவாரணமாக சென்னையில் உள்ள அனைவருக்கும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் அட்டை உள்ளவர்களிடமும், ரேஷன் அட்டை இல்லாதவர்களிடமும் விண்ணப்பங்கள் வாங்கி வைத்தும் இன்னும் பலருக்கு 6 ஆயிரம் ரூபாய் சென்று சேரவில்லை. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார் என திமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.