’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன் விவசாயிகளின் தற்கொலை, கொரோனாவுக்கு பிறகான மக்களின் வாழ்க்கை முறையில் நிகழும் மாற்றம், காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேள்விகளை முன் வைத்தார்.
அந்த உரையாடலில், பொறியியல் மற்றும் மருத்துவத்தை போல விவசாயத்தையும் மதிப்புமிக்க லாபகரமான தொழிலாக மாற்ற படித்தவர்கள் தங்கள் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டுமா என்று அஸ்வின் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சத்குரு, “ஆம், 100 சதவீதம் அவ்வாறு நடக்க வேண்டும். தற்போது விவசாயம் செய்யும் விவசாயிகளில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர்.
மண்ணை உணவாக மாற்றுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நீங்களும் நானும் உணவு உண்பது விவசாயிகளால் தான். வெளிநாட்டில் இருந்து பெரிதாக எவ்வித உணவு இறக்குமதியும் செய்யாமல் இந்த தேசத்தில் வாழும் 140 கோடி மக்களுக்கு அவர்கள் உணவு அளித்து வருகிறார்கள். வெறும் பாரம்பரிய அறிவை மட்டும் வைத்து கொண்டு, பெரிய தொழில்நுட்ப உதவி இன்றி இதை அவர்கள் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நிலவும் அட்சரேகை பரவல் காரணமாக ஆண்டு முழுவதும் இங்கு விவசாயம் நடக்கிறது. கிட்டத்தட்ட உலகிற்கு தேவையான அனைத்து விளைபொருட்களையும் இங்கு விளைவிக்க முடியும். இந்த இயற்கை சிறப்புடன் 65 சதவீத விவசாய மக்கள் தொகையை சிறப்பாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த உலகத்திற்கே நம்மால் உணவு அளிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்.” என்றார்.