மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சிம்புவின் உருக்கமான பதிவு!

Filed under: சினிமா |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் சிம்பு பாடகர் எஸ் பி சுப்ரமணியம் உடன் நடந்த சில நிகழ்வுகளை உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்; எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.

சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க.. காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக்கொள்ள உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பட வந்திருந்தார்.

குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருக்கிறார்கள்.

என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

அதைப்போல.. “காதல் அழிவதில்லை” படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் “இவன்தான் நாயகன்” என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார்.

முதன் முதலில் “இவன் தான் நாயகன்” என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்.

விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடும் நிலாவே.. லவ்யூ

இவ்வாறு நடிகர் சிம்பு பதிவிட்டுள்ளார்.