சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்தப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களுடன் ரூ.4,000/-, உதவித்தொகை வழங்கப்பட்டது, இதன்மூலம் சுமார் 11,065 திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்எ.வ. வேலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரைத் தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.