உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
‘Sadhguru Center for a Conscious Planet’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது. பெத் இஸ்ரேல் மையமானது ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பிரத்யேக மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து (Medical and Contemplative sciences) எங்களுடைய நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய உள்ளோம். சத்குருவின் பெயரில் இம்மையத்தை தொடங்கி இருப்பதை பெருமையாக கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மனித விழிப்புணர்வை மேம்படுத்தி விழிப்புணர்வான உலகை படைக்க விரும்பும் சத்குருவின் ‘Conscious Planet’ என்ற முன்னெடுப்புக்கு இம்மையம் உறுதுணையாக இருக்கும்.