வாஷிங்டன், செப் 24:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்துப் பேசினார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். பின் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை அவர் சந்தித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க தேவையான முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களுக்கு தினமும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதையும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதை குறிப்பிட்டு, அதை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், பாக்., அரசிடம் வலியுறுத்திக் கூறினார்.
பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, உதவி நல்கிய அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், இந்தியாவுக்கு வருமாறு, கமலா ஹாரிசுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசை வரவேற்க, இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக, பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.