கொரோனா வைரஸ் : கோவைக்கு ரெட் அலார்ட் !

Filed under: தமிழகம் |
வே. மாரீஸ்வரன்
 
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கோவையில் கொரோனா வால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 
கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் 17 பேர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையைச் சேர்ந்த இரண்டு பேர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர். இவர்களில் 13 பெண்கள் உட்பட நான்கு வயது குழந்தையும் இருப்பதால் இவர்களையும் சேர்த்து தற்போது கோவை சிங்காநல்லூர் இ.எஸ். ஐ. மருத்துவமனையில் 119 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கோவை மாநகர் பகுதிகளான ஆர்எஸ் புரம், காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, அரசு மருத்துவமனை பகுதி, பீளமேடு, அவிநாசி ரோடு, துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா கோவில், பூமார்க்கெட், மரக்கடை, டவுன்ஹால், நஞ்சுண்டாபுரம், குனியமுத்தூர், குறிச்சி பிரிவு, சுந்தராபுரம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, உக்கடம் வின்சென்ட் ரோடு, உக்கடம் பைபாஸ், ஜி எம் நகர், ஜேகே கார்டன், பொன்விழா நகர், உக்கடம், மற்றும் கோவை புறநகர் பகுதிகளான காக்கா சாவடி, வாளையார், காரமடை, செட்டிபாளையம், இடையர்பாளையம், போன்ற பகுதிகளில் காவல்துறையினர் செக்போஸ்ட் அமைத்து பொதுமக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த உள்ளார்களாம்.
 
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் டில்லி சென்று திரும்பியவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று உறுதியான அவர்களுடன் தொடர்பில் இருந்த 700 பேருக்கு ஓரிரு நாட்களில் வைரஸ் பரிசோதனை முடிக்கப்படும். முன்பு வைரஸ் தொற்று இருந்தவர்கள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இனிவரும் காலங்களில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.