தர்மபுரி காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

Filed under: தமிழகம் |

தர்மபுரி, செப் 30:
தர்மபுரி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல், அவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனால், பொதுமக்கள் மத்தியில், அவருக்கு உள்ள செல்வாக்கும் மதிப்பும் உயர்ந்து வருவது நன்றாகவே தெரிகிறது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு விழாவில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், திடீரென அதியமான்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கோப்புகளை அவர் பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளிடமும் உரையாடினார்.

மேலும் வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இரவில் காவல் நிலையத்திற்கு சென்று முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.