நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

Filed under: இந்தியா |

பஞ்சாப், செப் 29:

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாபில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடித்துவந்த நிலையில், சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் அமரீந்தர்.

பின், மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருடன், அமைச்சரவையிலும் பலர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு மனிதன் எப்போது சமரசம் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

எனவே, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை, நான் ராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன்.
இவ்வாறு அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்துவின் ராஜினாமாவால், மாநில அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமரீந்தர் சிங், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.