பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்துக!

Filed under: தமிழகம் |

சிதம்பரம்,மே 20

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களை ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பிறகும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் பணியமர்த்த அண்ணாமலை பல்கலைக்கழகம் மறுத்து வருகிறது.  செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் மீறுவது நியாயமற்ற செயலாகும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்டது. பல்கலைக் கழகத்தில் அளவுக்கு அதிகமான பணியாளர்களும், ஆசிரியர்களும் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்களை பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்வதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை குறைக்க முடியும் என்றும் அந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய சிவதாஸ் மீனா அரசுக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி, 2017-ஆம் ஆண்டு  ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சி மற்றும் டி பிரிவுகளைச் சேர்ந்த 3600 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றி பணியமர்த்தப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கும், பணியாளர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், சி மற்றும் டி பணியாளர்கள் பிற அரசுத் துறைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும், அதன்பின் அவர்கள் அந்த துறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், 2017-ஆம் ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட 3600 பணியாளர்களில் 2040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மனிதநேயமற்ற செயலாகும். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மீட்க முடியாத நிதி நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து, அதை சரி செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் பணி நிரவல் திட்டத்துக்கு சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால், பணி நிரவல் காலத்தில் அவர்கள் பொருளாதார அடிப்படையிலும், தனிநபர் அடிப்படையிலும் ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளனர்.

பணி நிரவல் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்து வருபவர்கள் ஆவர். அவர்கள் அங்கிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டனர். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். பணிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு  இதுவரை எந்த இழப்பீட்டையும் பல்கலைக்கழகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு, பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட பணி நிரவல் பணியாளர்களுக்கு ஒப்பந்த நீட்டிப்பு என்ற பெயரில் மேலும் சுமையைக் கொடுக்க பல்கலைக்கழகம் நினைப்பது சரியல்ல.

எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பின்னர் 3 ஆண்டுகள் பணி நிரவல்  காலத்தில் பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றி முடித்த 2040 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும். பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவிஉயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.