மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு !

Filed under: இந்தியா,உலகம் |

mars_photo_2124642fசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சில மணி நேரங்களில் விண்கலத்தில் இருந்தவற்றில் 5 உபகரணங்கள் இயக்கப்பட்டன.

அதில் ஒன்று வண்ணப் புகைப்பட கேமராவாகும். அந்த கேமரா செயல்படத் தொடங்கி, 10 புகைப்படங்களை அனுப்பியுள்ளது. மற்ற இயந்திரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக செயல்படத் துவங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.