சியோல், செப் 29:
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வட கொரியா நேற்று சோதித்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வந்தது.
பின், 2018ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, வடகொரியாவின் நிலை சற்று மாறியது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதிப்பதை வடகொரியா நிறுத்தியது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்தது. இங்குள்ள ஜகாங் மாகாணத்தின் மலைப் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என, தகவல் கிடைத்துள்ளது.