முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Filed under: சென்னை,தமிழகம் |
முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் தமிழ்ப் புத்தாண்டு  வாழ்த்துச் செய்தி

தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
  வாளோடு முன் தோன்றி மூத்த குடி

என்ற பாடலுக்கேற்ப, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்தியாவிலேயே முதலீட்டாளர்கள் நாடுகின்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடுவதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மிக முக்கியமாக நம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றிலும் தமிழகம் முதலிடம் பெறுவதே எனது இலட்சியம் என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இலட்சியத்தை நனவாக்கும் வகையில், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியமைக்காக மத்திய அரசால் இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்தப் புத்தாண்டில், தமிழர் தம் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும், தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும், அவர்தம் வாழ்வில் இன்ப ஒளி பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.