முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பணி கடந்த 2 ஆண்டுகளாக நினைவிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவு சார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவு பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் கடந்த நவம்பர் 17ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
டிசம்பர் 3ம் தேதிக்குள் டெண்டர் திறக்கப்பட்டு தனியார் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் சார்பில் தற்போது அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்கா மையம் அமைக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் இப்பணியை முடித்து, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அவரது நினைவிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, நினைவிட கட்டுமான பணியை வேகப்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 மாதங்களுக்கு இப்பணியில் ஈடுபடுகிறார். மேலும், இப்பணியை கவனிக்க கூடுதலாக உதவி செயற்பொறியாளர்கள் நீலக்கண்ணன், விஜய் ஆனந்த், உதவி பொறியாளர்கள் சாந்தி, பார்த்திபன், கிரிதரன், இளநிலை பொறியாளர்கள் பார்த்தசாரதி, கல்யாணசுந்தரம், செல்வராஜ் ஆகிய 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டியிருப்பதால், இன்றையில் இருந்து பணி முடிக்கும் வரை அவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தெரிவித்துள்ளார்.