மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்:

Filed under: அரசியல் |

மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்:

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தொகுதி மொடக்குறிச்சி. ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட தொகுதிகளில் முக்கியமானது. 1967 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஊராட்சிகள்: புஞ்சை லக்காபுரம், 46 புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையார்பாறை, நாகமநாயக்கன்பாளையம் கிராமங்கள்.

பேரூராட்சிகள்: அவல்பூந்துறை, மொடக்குறிச்சி , பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு , சிவகிரி , கொள்ளங்கோயில், ஊஞ்சலூர் , வெங்கம்பூர், கொடுமுடி, சென்னசமுத்திரம். 

வாக்காளர் விவரம்

ஆண்கள் – 1,13,952
பெண்கள் – 1,23,493
மூன்றாம் பாலினத்தவர் – 12
மொத்தம் – 2,37,457

தொழில், சமூக நிலவரம்

தொகுதிக்குள்பட்ட கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மையே முக்கியத் தொழில். வேளாண்மைக்கு அடுத்ததாக விசைத்தறித் தொழில் அதிகமானோரால் மேற்கொள்ளப்படுகிறது.

தொகுதி முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்கள், துணி மடிப்பவர்கள், சுமைப் பணியாளர் உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. கொங்கு வேளாளர் சமுதாயத்தினரின் அடையாளமாகத் திகழும் தீரன்சின்னமலை மணி மண்டபம் இந்த தொகுதியில்தான் உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் 35 சதவீதம் கொங்கு வேளாள கவுண்டர்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாக சுமார் 20 சதவீதம் அளவுக்கு அருந்ததியர்களும், 15 சதவீதம் வேட்டுவக் கவுண்டர்கள், முதலியார், நாடார், வன்னியர், சிறுபான்மையினர் குறிப்பிடத்தகுந்த அளவில் வசிக்கின்றனர்.

திரும்பிப் பார்க்க வைத்த தொகுதி

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1,033 வேட்பாளர்களை களத்தில் இறக்கி அதிரடி காட்டினர். இதனால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பேசப்பட்ட தொகுதி.

1,033 பேர் போட்டியிட்டதால் தேர்தல் நடைமுறையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு புதுமைகள் நிகழ்த்தப்பட்டன. அதிகம் பேர் போட்டியிட்டதாலேயே ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், 120 பக்கங்கள் கொண்ட வாக்குச் சீட்டு புத்தகம், ஒரு வாக்கு கூட பெற்றிடாத 63 வேட்பாளர்கள் என ஏராளமான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த தேர்தல்கள்

இதுவரை நடைபெற்றுள்ள 12 தேர்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.

1967 கே. ஆர். நல்லசிவம் – (சங்கத சோசலிச கட்சி)
1971 மு. சின்னசாமி – (திமுக)
1977 சுப்புலட்சுமி ஜெகதீசன் – (அதிமுக) 
1980 ச. பாலகிருஷ்ணன் – (அதிமுக)
1984 ச.பாலகிருஷ்ணன் – (அதிமுக)
1989 அ. கணேசமூர்த்தி – (திமுக)
1991 கவிநிலவு தர்மராசு – (அதிமுக)
1996 சுப்புலட்சுமி ஜெகதீசன் – (திமுக)
2001 பி.சி.ராமசாமி – (அதிமுக)
2006 ஆர்.எம்.பழனிசாமி – (காங்கிரஸ்)
2011 ஆர்.என்.கிட்டுசாமி – (அதிமுக)
2016 வி. பி. சிவசுப்ரமணியன் – (அதிமுக).

2016 தேர்தல்

வி.பி.சிவசுப்ரமணியன் (அதிமுக) – 77,067
பி.சச்சிதானந்தம் (திமுக) – 74,845
வித்தியாசம் – 2,222.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறிப்பிடும்படியான பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதேநேரம் ஏழை, அடித்தட்டு மக்களுக்கான அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளன.

தீர்க்கப்படாத பிரச்னைகள்

விவசாயம் அதிகளவில் நடைபெறும் இந்தத் தொகுதியில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டம், கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு வரை விளை நிலங்கள் வழியாக பெட்ரோலியம் எடுத்துச் செல்லும் திட்டம் ஆகியவற்றால் விளை நிலங்கள் பறிபோகும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. பாசூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற 10 ஆண்டு கால கோரிக்கை இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

விசைத்தறி கூடங்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு மானிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

46 புதூர் கிராமத்தில் கடந்த 2015 இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் திறந்து வைத்த பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

கீழ் பவானி திட்ட வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மொடக்குறிச்சி தொகுதி, அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில், கீழ்பவானி பாசன திட்டத்தில் சேர்க்கப்படாத விளைநிலங்கள் வீணாகி தரிசாகக் கிடக்கின்றன. இதற்காக திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்படும் கடந்த பத்தாண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிவகிரியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இந்தத் தொகுதியில் இருபெரும் திராவிடக் கட்சிகளான அதிமுகவும், திமுகவுமே மீண்டும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் புதிய முகம் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் சச்சிதானந்தத்துக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய நிலங்கள் அரசுத் திட்டங்களுக்கு கட்டாயமாகப் பறிக்கப்படும் பிரச்னைகள் தீர்க்கப்படாத நிலையில், இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விவசாயிகள் மாறியுள்ளனர் எனலாம்.