வேண்டும் அனுபவசாலி வேட்பாளர்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

அரசியல்வாதிகள் இந்தியாவில் பேசுவது ஒன்று. ஆனால் செயல்படுத்துவது எதிர்மாறான செயலாகத்தான் இருக்கும். இந்திய மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்திய இந்திய கட்சிகள், தற்போது பொதுமக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு கலங்குகிறார்களாம். சொன்னதை செயல்படுத்தாத அரசியல்கட்சிகள் இந்த தேர்தலில் நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள் என்ற கருத்து உலவுகிறது. டெல்லி மாநில மக்கள் அனுபவித்த இன்னல்கள் மற்ற மாநில மக்களையும் சிந்திக்க வைத்துள்ளதாம்.
உயர்ந்து நிற்கும் விலைவாசி, சரிந்து கிடக்கும் பொருளாதாரம், திகைத்துநிற்கும் அதிகார வட்டங்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களை இந்தியமக்கள் கண்டு கொண்டு விட்டார்களாம். மேலும் தற்போதைய நாகரீக உலகில் வாழ்க்கை பழக்கப்படுத்திவிட்ட இந்திய மக்களுக்கு அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக தோன்றுகிறது.
ஊழலை ஒழிக்க புறப்பட்ட இந்திய கட்சிகள், மறுபடியும் ஊழல் பெருச்சாளிகளுக்கே தேர்தல் டிக்கெட் கொடுத்து உள்ளது என்கிறார்கள். கட்சிக்கு உழைத்து, அரசியல் எதிர்கால கனவுகளுடன் காத்திருக்கும் இளைய தலைமுறை தற்போது இந்திய கட்சிகளின் மீது கோபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் இளவரசன் ராகுல்காந்தியின் அரசியல் முதிர்ச்சி பெறாத கொள்கைகள், காங்கிரஸ் கட்சியை அதிர வைத்துள்ளது. இளையதலைமுறைக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்காமல், உட்கட்சி ஜனநாயகத் தேர்தல் என்ற முறையில் பழையபடி பெருச்சாளிகளுக்கே டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் அதிகம் எதிர்பார்க்கும் கர்நாடகத்தில் பழைய தலைவர்களே மறுபடியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு பெருத்த சரிவை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆந்திரத்தில் தெலுங்கானாவை பிரித்த காங்கிரசுக்கு அனைத்து திசைகளிலிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதாம். பா.ஜ.க.வில், காங்கிரசிலிருந்து பிரிந்து வரும் பல அரசியல்வாதிகளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் முக்கிய மாநிலங்கள் பா.ஜ.க.விற்கு சரிவை ஏற்படுத்துமா? என்ற கலக்கம் பா.ஜ.க.விற்கு ஏற்பட்டு உள்ளது. இதில் மூன்றாவது அணி கணிசமான இடங்களில் வெற்றிபெறலாம் என்ற கணிப்பு பத்திரிகை உலகில் இருந்தது உண்மை.
ஆனால் வங்காள மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர், ஒரிசா நவீன்பட்நாயக், பீகார் நிதிஷ்குமார் ஒன்றிணைந்து 60 இடங்களை பெறலாம் என்கிறார்கள். இவர்களுடன் தேவகௌடா, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், பருக்அப்துல்லா, மாயாவதி இணையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதனால் 40 இடங்கள் அதிகம் பெற்று இந்த கூட்டணி 110 இடங்களில் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது பா.ஜ.க., இந்த கூட்டணியை ஆதரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், தமிழக முதல்வர்தான் அடுத்த பிரதமர் என்று அடித்துக் கூறுகிறார்கள். காரணம் இடதுசாரிகள், முலாயம்சிங் ஒன்றிணைந்தாலும் பெரும் வெற்றி அடைவது மிகக்கடினம் என்ற கணிப்பு உள்ளது. பா.ஜ.க. நரேந்திரமோடி ஆட்சி அமைக்க, கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தலைநகரில் உலவுகிறது.
தமிழகத்தில் புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்த அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெல்லுமா? என்ற கேள்வி எழுகிறது. காரணம் மக்களுக்கு புதிய வேட்பாளர்களை பற்றிய அதிக விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற கருத்தும் உலவுகிறது.
நாளைய பிரதமர்கட்டிலில் அமரப்போகும் புரட்சித்தலைவிக்கு தகுதி வாய்ந்த முதிர்ந்த அரசியல்வாதிகள் அ.தி.மு.க.வில் தேவைப்படும் நிலை உருவாகும். அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த முதிர்ந்த அரசியல்வாதியை நாடுவதைவிட, தமிழக முதல்வர் தன்னுடைய கட்சியிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்று கணிக்கிறார்கள்.
மேலும் தமிழக முதல்வரின் எதிர்கால இந்திய கனவுகள், தன் கட்சி உறுப்பினர்களிடையே அலசல் செய்வதால் மாற்றுக்கட்சிகள் எதிர்காலத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கமுடியும் என்று குறிப்பிடுகிறார்கள். பாராளுமன்றத்திலும், நிர்வாகத்திலும் தேர்ச்சி பெற்ற அ.தி.மு.க. தலைவர்கள், தற்போதைய பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவது எதிர்கால இந்திய பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் என்று தலைநகர அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.