அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பெரும் வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நீர் வடியாததால் வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் தான் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக களமிறங்கியுள்ள ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 21,884 பேரை மீட்டுள்ளனர். அங்குள்ள திமா ஹசாவோ மாவட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்திய விமானப்படையின் ஹெலிக்காப்டர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.