சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

Filed under: விளையாட்டு |

சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் (55) மற்றும் டேனியல் லாரான்ஸ் (46) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே புஜாரா (17) விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனையடுத்து களத்திற்கு வந்த இந்திய கேப்டன் விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் தேவை இல்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார். கோலியை தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 27 ரன்களிலும், தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 49 ரன்களிலும், ஆல் ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின் 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

சீனியர் வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 146 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டை இழந்த போது, ஜோடி சேர்ந்த வாசிங்டன் சுந்தர் – ரிஷப் பண்ட் கூட்டணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் குவித்து வருகின்றனர். சீரான இடைவேளையில் தேவைக்கு ஏற்ப பவுண்டரிகள் அடித்து விளையாடி வரும் ரிஷப் பண்ட் 115 பந்துகளில் சதம் அடித்து, டெஸ்ட் அரங்கில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார். மறுமுனையில் வாசிங்டன் சுந்தரும் 91 பந்துகளில் 40 ரன்கள் குவித்து தொடர்ந்து நிதானமாக விளையாடி வருவதன் மூலம், 84வது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 259 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ள ரிஷப் பண்ட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விரேந்திர சேவாக், ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் பலர் ரிஷப் பண்ட்டை அதிகமாக பாராட்டி வருகின்றனர். ரசிகர்களும் ரிஷப் பண்ட்டிற்கு சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.