சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தில் கொரோனா ஊழியர்கள் அலறல்!

Filed under: சென்னை |

சென்னை, ஜூன் 3

சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அலுவலகப் பணியில் ஈடுபடும் உதவியாளர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் உதவியாளருடன் வேலை செய்துவந்த சக பணியாளர்கள் 77 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த புதன்கிழமை கண்காணிப்பாளர், புள்ளியியல் வல்லுநர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கடந்த 10 நாட்களாக பணிக்கு வந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1 ஆக பணிபுரிந்த பிரசில்லா கொரோனா நோய்த்தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி சிறப்பான பணியை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு கொவிட் 19 விதிகளின்படி பத்து பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அலுவலகத்தை மூட வேண்டும். அத்துடன் 50% பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால் 100% பணியாளர்களை நிர்வாகம் மிரட்டி வரவழைக்கின்றனர். இதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட காரணமாகி விடுகிறது என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்படி குற்றச்சாட்டுகளை நம்மிடத்தில் பதிவு செய்கிறார்கள். மருத்துவக்கல்வி இயக்குனர்  நடவடிக்கை எடுப்பாரா.?