1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு…சிக்கிய பால் தினகரன்..?

Filed under: Uncategory,தமிழகம் |

கிறிஸ்தவ மத போதகரும்,’இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரன், 1,௦௦௦ கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில்,இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை, வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளர்கள்

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் பல கிளைகள் உண்டு.அதுமட்டுமல்ல பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் இயேசு அழைக்கிறார் என்ற, குழுமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறைக்கு புகார் சென்றது.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் பணம் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை கணக்கில் காட்டாமல் குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும், புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள பிரசார அரங்கம், அடையாறு, ஜீவரத்தினம் நகர் வீடு, ஆர்.ஏ.புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல, கோவையில், சிறுவாணி சாலை, காருண்யா பல்கலை மற்றும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள, காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் சோதனை நடந்தது. வளாகங்களின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, யாரும் உள்ளே மற்றும் வெளியே செல்லாதவாறு, போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பல்கலை வளாகம், மைய அலுவலகம், ஊழியர்களின் குடியிருப்புகளிலும் சோதனைகள் நடந்தப்பட்டது.அங்கு கைப்பற்றப்பட்ட ரசீது, ஆவணங்கள் குறித்து, நிறுவனம் மற்றும் பல்கலை அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது,
அறக்கட்டளைக்கு என, தனி வரி விலக்கு உண்டு. அந்த வரி விலக்கில், விதிமீறல்கள் நடந்திருந்தால், அதுவும் வரி ஏய்ப்பாகவே பார்க்கப்படும். இயேசு அழைக்கிறார் அமைப்பில், வரி ஏய்ப்பு என எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தான் சோதனை நடத்துகிறோம். வரி சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. மேலும், அறக்கட்டளைக்கு வந்த நிதியை விட, செலவு செய்த தொகைக்கு, அதிகம் கணக்கு காட்டப்படுவதாகவும், எங்களுக்கு புகார்கள் வந்தது.

அதனை தொடர்ந்து தான் தமிழகம் முழுதும், 25 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இதில், 250 ம் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அறக்கட்டளைக்கு வந்த நிதிக்கு, முறையான கணக்குகள் காட்டப்படவில்லை. அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட நிதியை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்ததும், சோதனையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான ஆவணங்களும், பரிவர்த்தனை ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ‘ஹார்டு டிஸ்க், பென்டிரைவ்’ மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, 1,000 கோடிக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டது. தெரிய வந்துள்ளது எனவும் அதற்கான அனைத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன எனவும், உண்மையான மதிப்பு, சோதனை முடிந்த பின்னரே தெரிய வரும் என்றும் இது தொடர்பாக, பால் தினகரனிடமும், அவரது ஆடிட்டர்களிடமும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் பால் தினகரன், வெளிநாட்டில் இருப்பதால், அவரை சென்னைக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன எனவும் அவர் சென்னை வந்ததும், அவரிடம் விசாரணை நடைபெறும் என்று வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்