தூய்மையான காற்று மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் புபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நீல வானத்திற்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினத்தின் இரண்டாம் ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை முழுவதும் மேம்படுத்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்த ஏராளமான முன்முயற்சிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறினார்.
“2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-ஆம் ஆண்டு 86 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 104 நகரங்களாக அதிகரித்தது”, என்று அமைச்சர் தெரிவித்தார். அனைத்து கொள்கை அணுகுமுறைகளிலும் நீர், காற்று மற்றும் பூமி போன்ற பொது சொத்துக்களுக்கு பிரதமர் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக திரு புபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தில்லியின் ஆனந்த் விஹாரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பனிப்புகை கோபுரத்தை காணொலி வாயிலாக அமைச்சர் தொடங்கி வைததார். காற்று மாசை குறைப்பதற்காக காற்றை சுத்திகரிக்கும் கட்டமைப்பான பனிப்புகை கோபுரத்தின் இந்த சோதனை முயற்சி சிறந்த பலனை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.