சென்னை : தமிழகத்தில் இதுவரை 1,372 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், சென்னைக்கு முதல் கட்டமாக, 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ளதாகவும், அதன் மூலம் பரிசோதனை செய்ய 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பகுதிகள் அல்லாத மற்ற பகுதிகளில் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட சளி காய்ச்சல் இருக்கும் நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், ஊடகத்தினருக்கும் இந்தப் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.
மேலும் மாநகராட்சி அலுவலர்கள் சென்னையில் வீடுதோறும் சென்று யாருக்கேனும் சளி, காய்ச்சல் உள்ளதா எனக் கணக்கெடுத்து வருகின்றனர். இதனைத் தொந்தரவாக நினைக்காமல் அரசின் சேவை வாசல் வரை வருவதாக நினைத்து யாருக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லுங்கள். இதனைச் சொல்வதில் எந்த சிரமமும் இல்லை. அவர்களுக்குப் பிரச்சினை இருந்தால் மருத்துவர்கள் நேரடியாக வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான சிறந்த சிகிச்சைகளை வழங்குவார்கள் என தெரிவித்தார்.